கோவில் வரலாறு

சுவிற்சர்லாந்து அருள்மிகு சிறி நவசக்தி விநாயகர் ஆலயம்

சுவிற்சர்லாந்து கிறபுண்டன் மாநிலத்தில் வதியும் தமிழ் மக்களின், வழிபாட்டுத் தலமாக இருந்து வரும் அருள்மிகு சிறி நவகத்தி விநாயகர் ஆலயத்தின் உருவாக்கம் குறித்த ஒரு சிறிய அறிமுகம் இது.

1980 களில் இலங்கையிலில் ஏற்பட்ட உள்ளநாட்டுக் கலவரங்கள் காரணமாக, அதன் நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட மக்கள் புலம் பெயர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளிலும் வதியத் தலைப்பட்டார்கள்.  இவ்வாறு சுவிற்சர்லாந்து நாட்டிற்கு வந்த தமிழ் அரசியல் அகதிகளில் கிரபுண்டன் மாநிலத்தில், அகதிகள் திணைக்களத்தால் அனுப்பபட்ட மக்கள்  லூயி ஸ்ராசா, கூர் என்ற இடத்தில் இருந்த அகதி முகாமில், பல்வேறு நாட்டு அகதிகளுடனும் வாழத் தொடங்கினார்கள்.

குடும்பங்களையும், உறவுகளையும், பிரிந்து உதிரிகளாக இங்கு வந்த வாழத் தொடங்கிய மக்களிற்கு இந்தப் புதிய சூழலின் வாழ்நிலை உடனடியான இயல்பு நிலையைத் தோற்றுவிக்கவில்லை.  சூழல், உணவு, உடை எனப் பல்வேறு கூறுகளிலும் வேறுபட்டிருந்த இப் புதிய சூழ்நிலையும், உறவுகளைப் பிரிந்த சூழ்நிலையும், அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானார்கள்.

தாயக மண்ணில் தங்களுக்கான மனஎழுச்சியினை, இறுக்கமான சமய வழிபாடுகளினால் மட்டும் பெற்றுப் பழக்கபட்ட அவர்களுக்கு, இங்கு அப்படியான ஒரு வாய்ப்பு இல்லாதிருந்தது பெரும் துயரமாக இருந்தது. இந்தக்குறையினை தங்களுடைய அகதி முகாமில் குறை கேட்கும் சந்தர்பம் ஒன்றில் பலரும் தெரிவித்த போது,  அங்கு பிரசன்னமாயிருந்த கத்தோலிக்கப் பாதிரியார், அவர்களது கவலையின் தாக்கத்தைப் புரிந்து கொண்டு, முகாம் பொறுப்பாளர்களிடம் உரையாடி, முகாமின் மேல் மாடியிலிருந்த ஒரு அறையினை அவர்களது வழிபாட்டுக்குப் பாவிக்க வகை செய்தார்.

இந்த ஏற்பாடு அந்த மக்களுக்க மிகப் பெரிய வரப்பிரசாதமாகவும், மனமகிழ்ச்சி தருவதாகவும் அமைந்தது. அந்த உற்சாகத்தில், தங்கள் இயல்புக்குக் கிடைத்த ஒரு விநாயகர் சிலை, மற்றும் சில தெய்வ உருவப்படங்களுடன், அந்த அந்த அறையில் வழிபாட்டினை ஆரம்பித்தார்கள். அந்த முகாம் அறையில், 1986ம் ஆண்டு காலப் பகுதியில் கருக் கொண்டதுதான் இந்த விநாயகர் ஆலயம்.

இவ்வாறு முகாம் அறையில் ஒரு வழிபாட்டு மையமாக ஆரம்பிக்கப்பட்டது படிப்படியாக, முகாமுக்கு வெளியே இருந்த தமிழ் அகதிகளுக்கும் தெரிய வர, அவர்களும் அங்கு வழிபாடு செய்வதற்கு வரத் தொடங்கினார்கள்.  முக்கியமாக வெள்ளிக்கிழமை மாலைகளில் ஒரு கூட்டு வழிபாடாக இது அமைந்தது.

1990 களின் தொடக்கத்தில், இவ்வாறு வழிபாட்டிற்கென வெளியே இருந்து அதிகளவு மக்கள் வரத் தொடங்கவே இடப் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அந்த வழிபாட்டு மையத்தை, முகாமுக்கு வெளியே வேறிடத்தில் நிறுவுவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  அந்த முயற்சிகளை மெற்கொள்ள ஒரு  செயல் நிர்வாக அமைப்பும் உருவாக்கப்பட்டது.

புதிய இடம் தேடிய காலப்பகுதியில், முகாமிற்கு வெளியே சில இடங்களிலும், மண்டபங்களிலும் வைத்து இந்த வழிபாடுகள் தொடரப்பட்டு, இறுதியில் கசேரண  ஸ்ராசாவில் ஒரு சிறிய இடத்தில் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் அருள் மிகு சிறி நவசக்தி விநாயகர் ஆலயம் என்ற பெயரோடு,  சிறிய ஆலயமாக ஸ்தாபிக்கப்பட்டது.

அதுவரையில்  கூட்டு வழிபாட்டுத் தலமாக இருந்த இந்த ஆலயம்,  இந்து சமய மரபு வழிபாட்டிற்கு அமைவான, ஆகம வழிபாட்டு ஆலயமாக உருப் பெற்றது. அப்பொழுது முதல் பிரதி வெள்ளிக்கிழமை தோறும்,  மாலை வழிபாடும், விசேட தினங்களுக்குரிய வழிபாடுகளும், ஆகம முறைப்படி, குருமார்களினால் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறான ஆகம வழிபாட்டுத்தலமாக கிறபுண்டன் மாநிலத்தில் உருவாகிய இந்த ஆலயம்,   அயல் மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் வழிபாட்டுத் தலமாகவும் அமையப்பெற்றது. அதனால் மேலும் மக்கள் வருகை அதிகரித்தது.  அகதிகளாக இங்கு வந்த மக்களின்,   மன அமைதிக்குரிய வழிபாட்டிடமாக அமைந்த இந்த ஆலயம்,  90 களின் நடுப்பகுதியில் மற்றுமொரு முக்கிய பங்கினை  வகிக்கத் தொடங்கியது.

90களில் இங்கு குடும்பமாக வந்த அகதிகளின் பிள்ளைகள்,  இங்கு குடும்பமாகியவர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு,  தமது சமூக கலாச்சார விழுமியங்களையும், மதவழிபாடுகள் குறித்த நடைமுறைகளையும் கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும்,  தமிழ் சமூகத்தித்தின் ஒன்று கூடல் மையமாகவும் இவ்வாலயம் பங்காற்றத் தொடங்கியது. மாறுபட்ட கலாச்சாரச் சூழலிலும், பிரிவுகளின் துயரங்களிலும் மனச்சோர்வுற்றிருந்த மக்களுக்கு, ஆறுதல் தரும் இடமாக இருந்த இந்த ஆலயத்தை நாடி வந்த மக்கள்,  பிள்ளைகள் தொகை என்பன அதிகரிக்க மறுபடியும் ஆலயம் இடநெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியது. இதன் காரணமாக 1998ல் மறுபடியும் ஆலயம் சற்றுப் பெரிய இடமாக தற்போதுள்ள இடத்தைத் தெரிவு செய்து,  அந்த இடத்தில் மேலும் சற்றுப் பெரிய ஆலயமாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இவ்வாறு கிரபுண்டன் மாநிலத்திலும், அதன் அயல் மாநிலங்களில் வாழும் மக்களுக்கும், அவர்களது இளைய தலைமுறைக்கும், தமிழ்க்கலாச்சார விழுமியங்களைப் பயிற்றுவிக்கும் மையமாகவும்,  சமூக ஒன்று கூடல் நிலையமாகவும்,  ஆன்மீக மன்றமாகவும்,  பன்முகத் தன்மையுயோடு விளங்குகின்ற இந்த ஆலயம்,  தன்னுடன் தொடர்புபட்டிருக்கும் இரண்டாம் தலைமுறையினருக்குச் சேவையாற்றத் தொடங்கியது.

இந்நிலையில் இதன் மற்றுமொரு பரிமாணமாக,  சுவிற்சர்லாந்தில் கல்வி பயிலும் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு, தமிழ் கலாச்சாரப் பண்புகளை காண்பிப்பதற்கும்,  இந்து மதக் கூறுகள் பற்றித் தெரிந்து கொள்வதற்கும், இதன் மூலம் சமூகங்களிடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் உரிய மையமாகவும் மாற்றம் கண்டுள்ளது.

இத்தகைய பல்வேறு பரிமாணங்கள் மூலம் முக்கியத்துவம் பெற்றிருக்கும், இந்த ஆலயம், தனித் தனியாக இருந்து, குடும்பங்களாக மாறியிருக்கும் தமிழமக்களிற்கு நிறைவான சேவையினை வழங்குவதற்கு இடவசதி பெரும் தடையாக இருக்கிறது.  இதற்கான மாற்றீடு மிக அவசியமாகவும், விரைவாகவும் செய்யபட வேண்டிய  தேவையில்,  அதற்கான உதவிகளை சமூக அக்கறைமிகு அனைவரிடமும் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

-ஆலய நிர்வாகம்

Leave a Reply

Your email is never published nor shared.

You may use these HTML tags and attributes:<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>